கோவையில் நாளை நடைபெறும் பா.ஜ.க புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கோவை மாநகர மாவட்ட பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில் துறையினர் பலர் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 26 ம் தேதி காலை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பா.ஜ.க வின் புதிய அலுவலகத்தினை அமித்ஷா திறந்து வைக்கிறார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து 26 ம் தேதி இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் மறுநாள் காலை தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, அங்கு இருந்து டெல்லி புறப்படுகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சரின் வருகையையொட்டி கோவை விமான நிலையம் கோவை மாநகர பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக கோவை விமான நிலையம், அவிநாசி சாலை, பீளமேடு, ஈஷா யோகா மையம் ஆகிய பகுதிகள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக கிட்டத்தட்ட 5000 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். முன்னதாக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா, எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஏ.சி எஸ் சண்முகம் உள்ளிட்டோர் விமான நிலையத்துக்கு வருகை புரிந்து இருந்தனர், விமான நிலையத்தில் உள்ள சாலையின் இருபுறங்களிலும் பா.ஜ.க தொண்டர்கள் ஆடல் பாடல் மற்றும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.அதோடு பா.ஜ.க பெண் தொண்டர் ஒருவர் பாரதமாதா வேடம் அணிந்து, பா.ஜ.க தொண்டர்கள் புடை சூழ வரவேற்பு கொடுத்தனர். இதனால் விமான நிலையமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. முன்னதாக பெரியநாயக்கன்பாளையம், ஆதிநாராயணன் பெருமாள் கோவிலில் உள்ள புரோகிதர்களால் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
