திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு 9.30 மணிக்கே அலிபிரி நடைபாதை மூடப்படும் என்று தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக அவர்கள், அலிபிரி வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் அலிபிரியில் இருந்து நடைபாதையின் 7வது மைல் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து நடைபாதையில் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
ஏற்கெனவே, திருப்பதி கோயிலுக்கு வந்த சிறுமியை சிறுத்தை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மற்றொரு சிறுமி படுகாயமடைந்தார். எனவே, நடைபாதையில் குழந்தைகளின் அனுமதி குறித்து சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் தனியாகவோ, குழுவாகவோ அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு பக்தர்கள் குழுக்களாக கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்கவேண்டும் என்பதை விஜிலென்ஸ் குழு கண்காணித்து வருகிறது.மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை. அலிபிரி நடைபாதை இரவு 10 மணிக்கு மூடப்பட்டு வந்தது. அது இனிமேல் இரவு 9.30 மணிக்கே மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.