• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது.

ByPrabhu Sekar

Feb 16, 2025

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் 27 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது. ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து கூலி தொழிலாளிகளுக்கும் ஐடி ஊழியர்களுக்கும் விற்பனை.

பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஆய்வாளர் நட்ராஜ் அவர்களுக்கு, கிழக்கு தாம்பரத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் நட்ராஜ் அடங்கிய தனிப்படையினர் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானம் அருகே காத்திருந்த போது, அங்கு மூட்டைகளுடன் வந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்ததில் ஒவ்வொருவர் பையிலும் தலா 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

அவர்கள் மூவரையும் விசாரணை செய்ததில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல் (24), முகிலன் (24), சேது ராமச்சந்திரன் (24), என்பதும் மூவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தாம்பரம் பகுதியில் இருந்து ரயில் மூலம் ராமநாதபுரம் கொண்டு சென்று அங்கு சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள கூலி தொழிலாளிகளுக்கு சில்லறை விற்பனைக்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்,

அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் 24 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்,

மேலும், அதே போல் அனகாபுத்தூர் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பார்சலுடன் நின்றிருந்த இருவரை விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் சென்னை பாடியை சேர்ந்த பரத் குமார் (23), பாபு (26) என்பதும் அவர்கள் வைத்திருந்த பையினை சோதனை செய்து பார்த்ததில் அதில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது. அதனை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து சென்னையில் உள்ள ஐ.டி ஊழியர்களுக்கும், மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டனர்.

இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா எடை இயந்திரம் மற்றும் 2 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து இரு வழக்குகளிலும் கைதான 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.