உத்தரப்பிரதேசத்தில் பேருந்தும், காருக்கும் நேர் மோதிக்கொண்டதில் கும்பமேளா சென்ற 10 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா ஜனவரி 13-ம் தேதி தொடங்கியது. வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஆன்மீக விழாவில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதனையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் காரில் திரிவேணி சங்கமத்தில் நீராட இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர். பிரயாக்ராஜ்- மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கார் எதிரே வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த பேருந்து மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு மகா கும்பமேளாவில் இருந்து வாரணாசிக்கு திரும்பிக் கொண்டிருந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் பலத்த காயம் அடைந்தனர். சேதமடைந்த வாகனத்தில் இருந்து இறந்தவர்களைப் பிரித்தெடுக்க ஜேசிபி இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துகுறித்து மெஜா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




