மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் வடக்குத்தெரு பகுதியில் ராஜ்குமார், தங்கத்துரை, மூவேந்தன் ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்பவர்களை தாக்கியும், கொலைமிரட்டல் விடுத்தும் வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறை சார்பில் முட்டம் பகுதியில் சாராய ரெய்டு நடைபெற்றது.
அப்போது சாராய வியாபாரி ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்துள்ளார். சிறையில் இருந்து வந்த அவர் மீண்டும் சாராயம் விற்பனை செய்துள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தட்டிக்கேட்டுள்ளார். அவரை சாராய வியாபாரிகள் தாக்கியுள்ளனர். இதை முட்டம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பாலிடெக்னிக் படித்து வேலை தேடி வந்த ஹரிஷ்(25), பேச்சாவடி பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் ஹரிசக்தி(22) தட்டிக்கேட்டுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அவரது மைத்துனர்கள் மூவேந்தன், தங்கத்துரை ஆகியோர் ஹரிஷை கத்தியால் குத்தியுள்ளனர். இதை தடுக்க வந்த ஹரிசக்தியையும் அவர்கள் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹரிசக்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.
இதனையறிந்த ஹரிஷ், ஹரிசக்தியின் உறவினர்கள் ராஜ்குமார் வீட்டின் முன்புறம் இருந்த கொட்டகையை தீ வைத்து கொளுத்தினர். அத்துடன் மூவேந்தன் வீட்டில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டைக்கொலை நடந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் இன்று அதிகாலை ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். அத்துடன் கொலை செய்யப்பட்ட ஹரிஷ், ஹரிசக்தி ஆகியோரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாராய வியாபாரத்தைத் தட்டிக்கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.