நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியினர் மக்கள் ஜாதி சான்று விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமரா கிராமங்களில் மலை வேடன் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக மலைவேடன் ஜாதி சான்று வழங்கப்படவில்லை. குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த இரு வார காலமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து பள்ளி புறக்கணிப்பு போராட்டம், சாலை மறியல் என்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு சார்பில் தமிழொலி ( மூத்த மானுடவியலாளர்), காளிதாஸ் ( மூத்த மானுடவியலாளர்), அமுத வள்ளுவன் (மானுடவியலாளர்) ஆகிய மூன்று பேர் கொண்ட குழுவினரை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.