டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 42 தொகுதிகளில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. டெல்லி முதல்வர் ஆதிஷி தொடர்ந்து பின்னடவை சந்தித்து வருகிறார்.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இந்த தேர்தல் நடைபெற்றது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள், இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவியது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
முன்னதாக கடந்த 2015 மற்றும் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்து களம் கண்டு பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி, பாஜக 42 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், இரண்டு சுற்றுக்கள் முடிவில் 254 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 4,679 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாகிப் சிங் 4,425 வாக்குகளும் பெற்றுள்ளனர். கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான ஆதிஷி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி 4,238 வாக்குகளும், ஆதிஷி 3,089 வாக்குகளும் பெற்றுள்ளனர்.