தரமற்ற தார்ச்சாலை… அதிகாரிகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் நிலையூர் 1வது மற்றும் 2வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி பகுதியில் கடந்த ஒரு சில நாட்களாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பழைய சாலையை அகற்றாமல் அதன் மேலேயே தார்சாலை அமைக்கப்பட்டதால் இப்பகுதி மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, ஏற்கனவே போடப்பட்ட சாலையை அகற்றாமல் அதன் மேலேயே சாலை போடப்பட்டதால், சாலை உயரம் கூடுவதாகவும், இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் கருதி ஒப்பந்ததாரரிடம் முறையிட்டனர்.

மேலும் சாலை அமைக்கப்பட்ட இரு ஓரங்களிலும் மண் நிரப்ப வேண்டும். ஆனால் இதற்கு மாறாக மண் நிரப்பப்படாமல் மண்வெட்டியால் பெயருக்கு கொத்தி விட்டு சென்றனர்.

தமிழக அரசு உத்தரவை மீறி, செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தார்ச்சாலையோரங்களில் மண்ணை நிரப்பவும் கோரி இப்பகுதி முழுவதும் நாம் தமிழர் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அந்த போஸ்டரை தற்போது ஒப்பந்ததாரர்கள் கிழிக்கப்பட்டதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
