வீர வரலாறு படைத்த ராணுவ டாங்கி கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைத்த ராணுவத்தினர் !!!
பல்வேறு போர்களில் தனது வீரத்தை காட்டி நாட்டிற்கு பெருமை சேர்த்த ராணுவ டாங்கி, இன்று கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ரெட் பீல்ட் சாலையில் உள்ள இந்திய ராணுவ முகாம் அலுவலகம் அருகில் உள்ள இந்த டி-55 வகை டாங்கி, 1955 ஆம் ஆண்டு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு, 1971 ஆம் ஆண்டு பஞ்சாப் போரில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது.
1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி முதல், 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி வரை, ஆபரேஷன் விஜய், ஆபரேஷன் பராக்கிராம் உள்ளிட்ட பல்வேறு போர்களில் இந்த டாங்கி தனது பங்களிப்பை அளித்து உள்ளது. 38 ஆண்டுகள் இந்திய ராணுவத்திற்கு சேவை செய்த இந்த டாங்கி, தற்போது கோவையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய ராணுவ லெப்டினன் கர்னல் பிரார் டாங்கியை திறந்து வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கே.ஜி. மருத்துவமனை தலைவர் மருத்துவர் பக்தவச்சலம் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாங்கியின் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

1679 பவுண்டுகள் எடை உள்ள இந்த டாங்கி, கோவையில் உள்ள இரண்டாவது ராணுவ டாங்கியாகும். கோவையில் உள்ள மதுக்கரையில் ராணுவ முகாமில் ஏற்கனவே ஒரு டாங்கி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க டாங்கியை பொதுமக்கள் நேரில் பார்த்து, அதன் வீர வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.





