• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்!

ByP.Kavitha Kumar

Jan 18, 2025

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்று (ஜனவரி 18) கடைசி நாள் ஆகும்.

பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் 34,793 ரேஷன் கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதற்காக அரசு சார்பில் ரூ.249.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் இலவச வேட்டி மற்றும் அதே எண்ணிக்கையில் இலவச சேலைகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்பட்டது. இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 9- ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அன்று ஒருநாள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று வரை, எட்டு நாட்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நடைபெற்றது. இதுவரை சுமார் 75 சதவீதம் ரேஷன் அட்டைதாரர்கள், பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் விடுமுறையை கொண்டாட ஏராளமானோர் ஊர்களுக்குச் சென்று விட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கவில்லை. இந்நிலையில், விடுமுறை முடிந்து வந்தாலும் ரேஷனில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை வரை பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.