சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் பாரதி விழா, தமிழ் இலக்கிய மன்ற விழா மற்றும் சமத்துவப் பொங்கல் ஆகிய விழாக்களை ஒருங்கிணைத்து ஒரே விழாவென முப்பெரும் விழா எடுக்கப்பட்டது. விழாவிற்கு முதன்மை விருந்தினர்களாக இடையமேலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையும் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருமதி.லட்சுமி மற்றும் தேவன்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியரும் தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.வெற்றி வெற்றி வேந்தன் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் பள்ளியின் தலைவர் டாக்டர்.பால.கார்த்திகேயன் தலைமை ஏற்ற இவ்விழாவில் சிவகங்கை தமிழ்ச் சங்கத்தின் கௌரவ ஆலோசகர் பகீரத நாச்சியப்பன், தலைவர், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கண்ணப்பன், சிவகங்கை தமிழவையம், ஒருங்கிணைப்பாளர் புலவர் கா.காளிராசா, மேலும் சிவகங்கை தமிழவையத்தைச் சேர்ந்த உறுப்பினர் மற்றும் மேனாள் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர், பா.இளங்கோவன், மேனாள் கூட்டுறவு சார்பதிவாளர் ஹ.சுரேஷ்குமார் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழா கொண்டாட்டம் காலை சூரியப் பொங்கலுடன் தொடங்கியது. முன்னதாக மாணவர்கள் அனைவருக்கும் சமத்துவப் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருள்களை கொண்டுவருமாறு தங்களது வகுப்பு ஆசிரியர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்தும் பாரதியார் மற்றும் கடவுள் போன்ற வேடமணிந்தும் வந்திருந்தனர். விழாவின் முதல் நிகழ்வாக தமிழரின் வாழ்வியல் ஆதாரமாகத் திகழும் மாடுகள் வரவழைக்கப்பட்டு மாலை, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தியபின் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் காளைகள் கட்டப்பட்டது. பின்பு முப்பெரும் விழாவின் துவக்க நிகழ்வாக அரசர் வேடமணிந்த மாணவர்கள் முதன்மை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மேள தாளம் நாதஸ்வரம் இசைத்து வரவேற்று கும்ப மரியாதை செய்து தலைப்பாகை கட்டி பள்ளியின் கலைத்துறைப் பிரிவு இயக்குநர் திருமதி.கங்கா கார்த்திகேயன், முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராஜன் நிர்வாக துணைத் தலைவர் தட்சிணா மூர்த்தி மற்றும் பொருளாளர் கலைக்குமார் ஆகியோருடன் விருந்தினர்களை விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.

விழாவானது பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரியத்தையும் தமிழ் மொழியின் மரபைப் பறைசாற்றும் விதமாக செல்வி. கவினோவியா மற்றும் செல்வி. இனியாவின் வரவேற்பு நடனம் அமைந்திருந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக சிலப்பதிகார வழக்குரை காதையை நாடக வடிவில் வெளிப்படுத்தினர். விழாவில் மழலையர் பிரிவு மாணவர்கள் வள்ளிக்கும்மி, பாரதியார் பாடல் மற்றும் ஆத்திச்சூடி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. சங்கத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ள கடையேழு வள்ளல்கள் போல வேடமணிந்து அவர்களின் கொடை, படை மற்றும் வீரம் பற்றிய வரலாற்றினை அனைவரின் பார்வைக்கும் காட்சிப்படுத்தினர். மேலும் விழாவில் சங்க இலக்கியம், அவற்றின் வகைப்பாடு குறித்தும், ராமன், இராவணன், கண்ணகி போன்ற முக்கிய கதா பாத்திரங்கள் குறித்தும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளியில் இந்த ஆண்டில் தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடைபெற்ற சில போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. விழாவில் மூன்றாம் வகுப்பு மாணவன் அமுதன் திருவாசகம் ஒப்புவித்து சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கௌரவம் செய்யப்பட்டது. விழாவில் ஏழாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்த்திய பழமொழி நாடகம் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் விழாவில் பள்ளி மாணவர்கள் தெருக்கூத்து நிகழ்த்தியது மிகவும் சிறப்பாக இருந்தது. இவ்விழாவினை ஆசிரியை அகிலாண்டேஸ்வரி, அஸ்வின் பாலாஜி, தமிழாசிரியர்கள் ஜெயப்பிரியா, தர்மராஜ், உடற்கல்வி ஆசிரியர் தினேஷ் குமார் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
