• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

கோவைக்கு பறந்தார் முதல்வர் ஸ்டாலின்…

Byகாயத்ரி

Nov 22, 2021

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று காலை 11.15 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு சென்றார். அங்கு அவருக்கு, அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் வ.உ.சி. மைதானத்திற்கு மதியம் சென்று அங்கு அவர், பல்வேறு அரசு துறைகள் சார்பில் ரூ.89 கோடியில் நிறைவேற்றப்பட்ட 120 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.இதையடுத்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.500 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், ரூ.440 கோடியில் 23 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.இதைத்தொடர்ந்து வ.உ.சி. மைதானத்தில் இருந்து கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு செல்கிறார். அங்கு, சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நிறைவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.மாலை 6 மணிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். 6.30 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு 7.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து இரவு அங்கேயே தங்குகிறார்.

அதன்பின் நாளை காலை 10.30 மணிக்கு கோவை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படும் முதல்வர், கொடிசியா முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். மதியம் 1 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று, சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.