ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐந்து தளங்களைக் கொண்ட மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள இன்வெர்ட்டர் அறையில் நேற்றிரவு 11.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.
இந்நிலையில், இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த அறையில் தீயால் ஏற்பட்ட புகையால் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் டார்ச் லைட் பயன்படுத்தி இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகளை ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தியும், தூக்கிக் கொண்டும் முதல் தளத்துக்கு அழைத்து வந்தனர். இன்வெட்டர் அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.