சிவகங்கையில் கவிஞர் மீரா-க்கு அடையாளப் பெயர், நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது என தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்தார்.
திராவிடக் கொள்கையிலும், பொதுவுடைமை கொள்கையிலும் தன் வாழ்நாள் இறுதி வரை பயணம் செய்தவர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த் தலைவராகவும் , பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றியவர். சிவகங்கையில் மகாகவி பாரதிக்கு நூற்றாண்டு விழா எடுத்து பாரதிக்கு பெருமை சேர்த்தவர். பேரறிஞர் அண்ணா அவர்களால் மீரா என்றழைக்கப்பட்டவர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் நன்மதிப்பு பெற்றவர். அவரிடம் கவிக்கோ விருதுப் பெற்றவர். சிவகங்கையில் அன்னம் பதிப்பகம், அகரம் அச்சகத்தின் மூலம் இளம் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளைத் தமிழிலக்கத்திற்கு கொண்டு வந்து இளம் எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார். அன்னம் விடுதூது என்னும் இதழை நடத்தினார். ஊசிகள், கனவு + கற்பனை =காகிதங்கள் , குக்கூ, மீ. இராசேந்திரன் கவிதைகள், உள்ளிட்ட கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்தில் தந்தை பெரியாரின் இனி வரும் உலகம், பட்டுக்கோட்டையார் பாடல் உள்ளிட்ட பல்வேறு சிறந்த தலைப்புகளைப் பாடத்தில் கொண்டு வந்தார். இத்தகு பெருமைமிகு கவிஞருக்கு சிவகங்கையில் அடையாளப் பெயர் , நினைவு மண்டபம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது தமிழாசிரியர் இளங்கோவன் வேண்டுகோள்.
