பெரம்பலூரில் அரசின் நலத்திட்ட உதவி தொகை பெற பெயரை பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக நல விரிவாக்க அலுவலர் காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பில்லங்குளம் அய்யனார் பாளையம் வடக்குதெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் பிரான்சிஸ் . இவரது மகள் ஜெயந்திக்கும், நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி, அம்மன் நகரை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் கனகராஜ் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெயந்திக்கு மூவாளூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் தாலிக்கு தங்கமும், நிதி உதவி பெறுவதற்காக கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 20ம்தேதி வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில் சமூக நல விரிவாக அலுவலர் காமாட்சியிடம் விண்ணப்பம் அளித்தார்.
பின்னர் 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ம்தேதி ஜெயந்திக்கும், கனகராஜிக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து 2011ம் ஆண்டு ஜூலை 4ம்தேதி பிரான்சிஸ் வேப்பந்தட்டை யூனியன் அலுவலகத்தில் சமூக நல விரிவாக அலுவலர் காமாட்சியை சந்தித்து நிதி உதவி எப்போது வரும் கேட்டதற்கு ஆயிரம் ரூபாய் தந்தால் தான் உனது விண்ணப்பத்தை நிதி உதவிக்காக பரிந்துரை செய்வேன் என கூறியுள்ளார்.
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரான்சிஸ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம்தேதி பிரான்சிஸ் வேப்பந்தட்டை யூனியன் அலுவலகம் சென்று அங்கு இருந்த சமூக நல விரிவாக அலுவலர் காமாட்சியிடம் லஞ்சம் பணம் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து காமாட்சியை கைது செய்தனர்.
இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது வந்தது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சங்கர், அரசின் நலத்திட்ட உதவி பெறுவதற்கு பெயர் பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கிய காமாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுப்பவிக்கவேண்டும் என உத்தரவிட்டார்.