• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் தகுதி வாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டி தீர்மானம்

கன்னியாகுமரி, ஜூன். 15: தமிழகத்தில் தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கன்னியாகுமரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி ஒய்.எம்.சி,ஏ. வளாகத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்துக்கு மாநில தலைவர் எஸ்.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் ஆர்.சதீஷ் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி மாவட்ட செயலர் எஸ்.லிங்கேசபெருமாள் வரவேற்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களுக்கு அரசாணை 212இன் படி ஓய்வூதியம் வழங்கிட பேரூராட்சிகளின் இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சித் துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களின் தர ஊதியம் ரூ. 1900ஆக குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, பொது அரசாணை வெளியிட வேண்டும். பேரூராட்சித் துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களுக்கு அரசாணை 679இன்படி ஒருமுறை பதவிஉயர்வு வழங்கிட பேரூராட்சித் துறை இயக்குநரை கேட்டு கொள்கிறோம்.

தமிழகத்தில் தகுதிவாய்ந்த ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். பேரூராட்சித் துறையில் இளநிலை உதவியாளர், வரிதண்டலர், மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கு 2023-24க்கான முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிடவேண்டும். பேரூராட்சித் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பேரூராட்சித் துறையில் பணிபுரியும் அடிப்படை பணியாளர்களின் 20 சதவிகித பதவி உயர்வு பட்டியலை, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாநில தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பி.குமார், மாநில பொருளாளர் எஸ்.ஆனந்தன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க முன்னாள் தலைவர் ந.முனியசாமி, குமரி மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சுரேஷ், கே.செல்வராஜா, கி.துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.