ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் International Day of United Nations Peacekeepers எனப்படுவது ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இரு சாராரையும் கௌரவப்படுத்துவதற்கும், சமாதானத்திற்கான இந்நடவடிக்கைகளின்போது உயிர் நீத்தவர்களை ஞாபகமூட்டுவதற்காகவும் 2001ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பிரகடனப்படுத்திய தினமாகும். இத்தினம் மே 29ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலாம் உலக மகா யுத்தம் முடிவுற்ற பின்பு உருவாக்கம் பெற்ற சர்வதேச சங்கத்தால் உலக சமாதானத்தைப் பேண முடியாதுபோனதன் காரணமாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், சொத்திழப்புக்களும் கணிப்பிட முடியாதவை. இந்த அடிப்படையில் மற்றுமொரு உலக மகா யுத்தம் ஏற்படாமல் உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் பெற்றதையடுத்து யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றின்போது சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்போர்களையும், கண்காணிப்பாளர்களையும் உரிய இடங்களில் பணிக்கு அமர்த்தும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. குறிப்பாக யுத்த நிறுத்தங்களின்போது அல்லது தற்காலிக யுத்த நிறுத்தங்களின்போது அமைதி காக்கும் படைகளின் பணியினை ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கக் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அடிப்படையில் மே 29ம் தேதி சர்வதேச அமைதி காப்போர் தினமாகப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2001ம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சர்வதேச அமைதி காப்போர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.