• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவை தொகுதி வழக்கை முடித்த வைத்த உயர்நீதிமன்றம்

Byவிஷா

Apr 30, 2024

கோவை மக்களவைத் தொகுதியின் தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தைச் சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதேநேரம், கடந்த 2019 மக்களவைத் தேர்தலிலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேபோல, தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பெயர் நீக்கும் முன் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஏப்ரல் 15ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமெனவும், அதுவரை கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், “கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர் தொகுதியில் வசிக்கவில்லை. மாறாக, ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதே மனுதாரரின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளிட்ட போது மனுதாரர் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்து விட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.