மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி 200 க்கும் அதிகமானோர் உள் நோயாளியாகவும், 500 க்கும் அதிகமானோர் புறநோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் தேங்கும் குப்பைகளை மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் இணை இயக்குனர் அலுவலகத்தின் பின் புறத்தில் சேகரிக்கப்பட்டு, தினசரி நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு வந்த சூழலில் கடந்த 1 மாத காலமாக குப்பைகளை அகற்றுவதில் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் குளறுபடி ஏற்பட்டு குப்பைகள் அகற்றப்படாமல் மலை போல தேங்கி காணப்படும் அவல நிலை உருவாகியுள்ளது.

குப்பைகள் அகற்றப்படாத சூழலில் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்க்கான சிகிச்சை பெற வரும் இடத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயகரமான சூழலில் குப்பைகள் தேங்கியுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை அகற்றுவதில் இரு நிர்வாகங்களிடையே ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்து மருத்துவமனையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.