• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

த.வெ.கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டம்

Byவிஷா

Feb 23, 2024

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல், வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், போட்டியிடுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
தற்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் செயல்பாடுகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் உறுப்பினர் சேர்க்கைக்கு செயலி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், செயலியை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், தனது கட்சியை பலப்படுத்த சுமார் 100 மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து, 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க முடிவு எடுத்துள்ள விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனால், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் தேதி மதுரை மாவட்டத்தில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, த.வெ.க. தலைவர் விஜய் தென் தமிழகத்தை குறிவைத்து களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கட்சியின் சின்னம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.