

அதிமுக மக்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின்றது திமுக கூட்டணியை நம்பி போட்டியிடுகின்றது என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிவகாசியில் திருத்தங்கல் பாலாஜி நகரில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பாக ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி .ராஜேந்திர பாலாஜி தலைமை வைத்து பேசும் போது,
எடப்பாடியார் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர முன்னோடியாக ஜெயலலிதா பிறந்த நாள் விழா இருக்க வேண்டும். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 14 இடங்களில் பிறந்த நாள் விழா நடக்கிறது..3 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் சிவகாசி பவடி தோப்பு பகுதியில் நடக்கிறது.தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் தினம், தினம் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.அ.தி.மு.க. மக்களை நம்பி தேர்தலில் களம் காண உள்ளது. தி.மு.க. கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கின்றது. மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு மதிப்பு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு உழைத்தவர் யாரும் வீணாக போனது இல்லை.
நாடாளுமன்ற தேர்தல் பணியை கழக நிர்வாகிகள் இன்றே தொடங்குங்கள். வெற்றி அருகில் வந்து விட்டது. அதை பயன் படுத்திக் கொள்ளவும். பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் .எஸ். ஆர். ராஜவர்மன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுபாஷினி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாநகரப் பகுதி கழகச் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய , மாநகர கழக நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


