• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வரலாறு காணாத கனமழையால் தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்..!

Byவிஷா

Dec 18, 2023

வரலாறு காணாத கனமழையால், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் மழைநீரில் தத்தளிக்கிறது.
தென் இலங்கை கடற்கரை அருகே வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனையடுத்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்கனமழை பெய்து வருகிறது. மழை இடைவிடாது கொட்டிக்கொண்டே இருப்பதால் தென் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறிவருகின்றன. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பெருமழை பெய்துள்ளது. மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் 20 நிவாரண முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை தென் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புக்குழுக்கள் மக்களை மீட்டு வருகின்றன. மருத்துவமனையில் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். மின்சாரம் கிடையாது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தாமிரபரணி ஆற்றில் 40000 கனஅடி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நிரம்பிவழிகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் மக்களை மீட்டு வருகின்றனர். கன்னியாகுமரியில் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில்  காயல்பட்டினத்தில் 93.2 சென்டிமீட்டர், திருச்செந்தூரில் 67 சென்டிமீட்டர், ஸ்ரீவைகுண்டத்தில் 62 செமீ, கோயில்பட்டியில் 49.5 சென்டிமீட்டர், சாத்தான்குளத்தில் 46.6 சென்டிமீட்டர், தூத்துக்குடியில் 36.1 சென்டிமீட்டர், ஒட்டப்பிடாரத்தில் 35.6 செமீ, கடம்பூரில் 34.8 செமீ, குலசேகரப்பட்டினத்தில் 32.6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் அதிகபட்சமாக 59.7 செ.மீ. மழையும், அம்பாசமுத்திரத்தில் 41.6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.