• Sun. Mar 15th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது… சென்னை உயர்நீதிமன்றம்..!

Byவிஷா

Oct 5, 2023

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பிகார் மாநில அரசு தரவுகளுடன் அறிக்கை வெளியிட்டதும் நாடு முழுவதும் அதுகுறித்த பேச்சு அதிகமாகியுள்ளது. இதனைதொடர்ந்து தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் சார்பில் முனியசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
‘தமிழ்நாட்டில் 3,000-க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகம் இருப்பதாலும் அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. தமிழ்நாடு அரசிடம் இதுகுறித்து மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை’ என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘சாதிவாரி கணக்கெடுப்பு மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட முடியாது. இதற்கு தமிழ்நாடு அரசைதான் அணுக வேண்டும்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், இது சம்பந்தமாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.