• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நெல்லையில் பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

Byவிஷா

Aug 25, 2023

நெல்லையில் பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இயற்கை ஆர்வலர் பனைமரத்தின் வளர்ப்பு பற்றியும் அவை தரும் பலன்கள் பற்றியும் விவரித்துப் பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் தருவை அருகே பனைமரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பனைமரம் வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அப்போது ‘எக் பவுன்டேசன்’ அமைப்பைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் நிவேக் அவரது நண்பர் சபரிவாசன் உள்ளிட்டோர் பனைமரம் அவசியம் குறித்து. விளக்கி பேசினர்.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர் நிவேக் நம்மிடையே கூறியதாவது,
“கற்பகத்தரு என்று சிறப்பிக்கப்படும் பனைமரம் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. பனை மரம் என்பது தமிழகத்தின் தேசிய மரம். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பனை மரங்கள் அதிகளவில் இருந்தன. தற்போது அவை குறைந்து விட்டன. குறிப்பாக தென் தமிழக பகுதிகளான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. பனை மரம் என்பது ஒரு சிறந்த பணப்பயிராக விளங்குகிறது.
இதிலிருந்து சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொருட்கள் நமக்குப் பயனளிக்கும் வகையில் கிடைக்கிறது. அவற்றுள் குறிப்பாகப் பனை ஓலை, பனங்கட்டை, நுங்கு, பதநீர், கள்ளு, பனங்கிழங்கு, பனம்பழம், தவுன், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை வெல்லம், பனை நார் போன்ற இயற்கையான பொருட்களும் நமக்குக் கிடைக்கிறது. ஒரு பனை மரம் வளர்ந்து பாலை விடுவதற்கு குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.
நன்கு வளர்ந்த ஒரு பனை மரம் சுமார் 100 ஆண்டு காலம் வரை ஆயுளுடன் வாழ்கிறது. இந்தப் பனை மரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு எனக் கூறப்பட்டாலும், தற்காலத்தில் அதன் வகைகள் என்பது மிகவும் சுருங்கிவிட்டது. முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்கள் தாங்கள் வாழ்ந்த வீடுகளில் பனங்கட்டைகளை பயன்படுத்தி கட்டுமானம் செய்தார்கள். பனை நார் கொண்டு பின்னப்பட்ட கட்டிலை படுத்து உறங்கப் பயன்படுத்தினர்.
இதனால் அவர்கள் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ்த்தார்கள். தற்கால வாழ்க்கையில் செயற்கை உணவுகளையும், ரசாயன கலவைகள் நிறைந்த தின்பண்டங்களையும் ருசிக்காக மட்டுமே உண்ணும் நிலையில், பனை பொருட்களின் உற்பத்தியும்சுருங்கி வருகிறது. நகரத்தின் விரிவாக்கம் மற்றும் குடியிருப்புகளின் விரிவாக்கம் போன்றவற்றிக்காக எண்ணற்ற பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
பனை மரங்களின் வேர்கள் மண்ணிற்குள் மிக ஆழமாகச் சென்று உறுதியாக நிற்பதால், கடும் புயல் அடித்தால் கூட அசையாமல் நிற்கிறது. இதனால் இந்தப் பனை மரங்களை குளத்தின் கரைகளிலும், தோட்டத்தின் வரப்புகளிலும், வயல்களின் வரப்புகளிலும் அதிகளவு வளர்த்து வந்தார்கள்.
பனைமரத்தின் வேர்கள் மண்ணுக்குள் ஆழமாகச் சென்று தனக்கு தேவையான தண்ணீரை தானே எடுத்துக்கொள்ளும் என்பதால், இதற்காக தனியாக தண்ணீர் விட வேண்டியதோ, உரங்கள் போட வேண்டியதோ இல்லை. பனை ஏறுவது அவமானம் அல்ல, இன்றைய சூழலில் பனைமரம் அவசியம். பனைமரம் இல்லையேல் நிலம் பாலைவனம் ஆகிவிடும்” என அவர் தெரிவித்தார்.