• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கல்குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலி

ByKalamegam Viswanathan

May 22, 2023

மதுரை அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சிறுவாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவருக்கு பூங்கொடி (வயது 40), விஜயலட்சுமி (வயது 30) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும், தினக்கூலியாக சமையல் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 21) மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள சிதம்பரம்பட்டிக்கு, இரவு சமையல் வேலைக்கு செல்வதற்காக இருவரும் வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மதுரை அழகர் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு இருவரும் ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், சாமி தரிசனம் முடித்த இருவரும் கோவிலின் அருகில் கல்குவாரிக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் குளித்துள்ளனர். அப்போது, எதிர்பாரதவிதமாக இருவரும் பள்ளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்றதால் மூழ்கியுள்ளனர்.
மேலே வர முடியாத சூழலில், மூச்சுத்திணரவே, இருவரும் கூச்சலிட்ட நிலையில், பள்ளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தான். இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பற்றுவதற்காக சென்றபோது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து, உடலை மீட்க முயன்றபோது இரவு நேரம் என்பதால் மீட்க முடியாத நிலையில், இன்று அதிகாலை (மே 22) சம்பவ இடத்திற்கு சென்ற தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர், நீரில் மூழ்கி உயிரிழந்த சகோதரிகள் இருவரது உடலையும் மீட்டு உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து, ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், நீரில் மூழ்கி சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளங்கள் அப்படியே விட்டுச் செல்லப்பட்டதால், அதில் நீர் நிரம்பியுள்ள நிலையில் ,அதனை பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், தொடர்ந்து நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், இதே போல் சில தினங்களுக்கு முன்பு திருத்தணியில் கல்குவாரி குட்டையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற ஒரு பெண் மற்றும் 2 சிறுமிகள் உட்பட மூன்று பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
எனவே, இதுபோன்ற தொடர் உயிர் இழப்புகளை தடுக்க குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என ,பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.