• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இன்று இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Apr 18, 2023

மனித குல வரலாற்றலே மிகவும் புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நினைவு நாள் இன்று (ஏப்ரல் 18, 1955).

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மார்ச் 14,1879ல் தேதி ஜெர்மனி நாட்டில் வுர்ட்டெம்பர்க் மாகாணத்தில் உள்ள உல்ம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஹேர்மன் ஐன்ஸ்டைன் மற்றும் தாயார் போலின் கோச். இவரது தந்தை நேர்மின்னோட்டம் மூலம் மின் உபகரணங்களை தயாரிக்கும் மின்வேதியியல்(electrochemical) சார்ந்த தொழிற்சாலையை நடத்தி வந்தார். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார். இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார்.

சிறுவயதில் பேச்சு வராமல் சிரமப்பட்ட அவர், எப்போதும் எதையாவது சிந்திப்பதிலேயே கவனத்தைக் கொண்டிருந்தார். இப்படித்தான் ஒருமுறை ஐன்ஸ்டீன், எதையோ தனிமையில் உட்கார்ந்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார். இதைக் கண்ட அவரது மாமா, ”உன் மகன் ஆல்பர்ட்டைப் பார், எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறான். அவன், ஓர் ஆராய்ச்சியாளன், சிந்தனையாளன் என்று நக்கலாகச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான், ஐன்ஸ்டீன் அன்னைக்குக் கோபம் தலைக்கு மீதேறிவிட்டது. எந்தத் தாய், தன் பிள்ளையை விட்டுக்கொடுப்பாள்? காக்கைக்குத் தன் குஞ்சும் பொன் குஞ்சு என்பதுபோல, தன் தம்பியையும் அவர் விட்டுவைக்கவில்லை. ”அவன், ஒரு சிறந்த சிந்தனையாளன், அறிவாளி அதனால்தான் அடக்கமாக இருக்கிறான். எதிர்காலத்தில் அவன் ஒரு புகழ்பெற்ற பேராசிரியனாகத் திகழப்போகிறான் என்றார், முகத்தில் அடித்ததுபோன்று.

ஐன்ஸ்டீன் அன்னை சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மை. ஆம், பிற்காலத்தில் அவர் எல்லா நாட்டவரும் போற்றும்படியாக வாழ்ந்த மிகச் சிறந்த சிந்தனையாளர். சாகும்வரை அடக்கத்துடனும், எளிமையுடனும் வாழ்ந்தவர். ஆடைகள் அணிவதிலும், அலங்காரம் செய்வதிலும் அவர் அலட்சியமாகவே இருப்பார். அழுக்கு ஆடையைப் பல நாள்கள்கூட அணிந்திருப்பார். வெட்டப்படாத தலைமுடியுடன் வீதிகளிலும், விழாக்களிலும் வலம்வருவார். சில நேரங்களில் செருப்பில்லாமலும், மேலங்கி அணியாமலும் வெளியே செல்வார். மறுமண மனைவி எல்ஸாவின் பேரிலேயே, அவர் நல்ல ஆடைகளை அணிவார். அப்படிப்பட்ட அந்த எளிமையான மாமேதை, ஓரிடத்துக்கு ஒருமுறை சொற்பொழிவாற்றச் சென்றபோது அவருடன், அவர் மனைவி எல்ஸா செல்ல முடியவில்லை. ஆதலால், தம் கணவருக்கு வேண்டிய நல்ல ஆடைகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்து அதை அவரிடம் கொடுத்தார். இந்தப் பெட்டியில் நல்ல உடைகள் வைத்திருக்கிறேன், சொற்பொழிவுக்குச் செல்லும்போது நீங்கள் மறந்துவிடாமல், அவைகளை எடுத்து அணிந்துகொள்ளுங்கள் என்றார்.

தன் மனைவி சொன்னதை அப்படியே கேட்டுக்கொண்ட ஐன்ஸ்டீன், நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிவந்தார். கணவரைக் கண்டு மகிழ்ச்சியடைந்த எல்ஸா, தாம் கொடுத்து அனுப்பிய பெட்டியை வாங்கித் திறந்துபார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். ஆம், அவர் வைத்த ஆடைகள் அப்படியே இருந்தன. கோபமடைந்த எல்ஜா, தம் கணவரிடம் ஏன் இந்த ஆடைகள் அடுக்கிவைத்தபடியே இருக்கின்றன… அவைகளை நீங்கள் அணிந்துகொள்ளவில்லையா என்றார். எல்ஸா கேட்டதைக் கண்டு கொஞ்சமும் கவலையடையாத ஐன்ஸ்டீன், சிரித்துக்கொண்டே அவரிடம், அடடா, எனக்கே மறந்தே போய்விட்டது நீ கோபித்துக்கொள்ள வேண்டாம் என்றார். அது இருக்கட்டும் எனக்கு ஒரு சந்தேகம் என்று அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். எல்லோரும் என் பேச்சைக் கேட்க வருகிறார்களா அல்லது என் ஆடையைப் பார்க்க வருகிறார்களா என்பதே அது. பாவம் எல்ஸாவால் அதற்குப் பதில் சொல்லவே முடியவில்லை.

ஐன்ஸ்டீனுக்கு முன்புவரை வெளி மற்றும் காலம் ஆகிய இரண்டும் தனித்தனியானவை, ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்றே கருதப்பட்டு வந்தன. சுவீஸ் காப்புரிமை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக பணியாற்றிய 26 வயதேயான இளைஞரான ஐன்ஸ்டீன் முன்மொழிந்த 3 கண்டுபிடிப்புகள் இயற்பியல் உலகையே புரட்டிப்போட்டது. நியூட்டனுடன் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட இயற்பியலின் புரட்சி சகாப்தம் ஐன்ஸ்டீனினால் தலைகீழாகிப் போனது. ஒளியின் வேகம் குறித்து இயற்பியலில் நிலவிய கருத்து மோதல்களுக்கு காலம், வெளி, நிறை (Mass) மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்ற புரிதல் தான் தீர்வாகும் என்று ஐன்ஸ்டீன் விளக்கினார். இதுவே சிறப்பு சார்பியல் கோட்பாடு தோன்ற அடிப்படையாக இருந்தது.

பிரபஞ்சத்தில் சாத்தியமான, அதீத வேகமான வினாடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோமீட்டர் என்ற வேகத்தில் செல்லும் பொருளின் நீளம் குறைவதுடன், காலம் குறைவதையும் ஐன்ஸ்டீன் கணக்கிட்டார். மேலும் அந்த அதீத வேகத்தில் செல்லும் பொருளின் நிறை அதிகரிக்கும் என்பதையும் கணக்கீடு மூலம் ஐன்ஸ்டீன் விளக்கினார். ஒளியின் திசைவேகம் வெற்றிடத்தில் மாறாதது என்ற நிபந்தனையுடனேயே தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டீன் முன்மொழிந்தார் ஆல்பர்ட். ஐன்ஸ்டைனின் மிக புகழ்பெற்ற சமன்பாடான E=mc2 சிறப்பு சார்பு கொள்கையின் மூலம் தருவிக்கப்பட்டதே ஆகும். இது நிறை-ஆற்றல் சமன்மையை பற்றி விளக்குகிறது. இது அணுக்கரு வினைகளின் செயல்பாடுகளை பற்றியும், விண்வெளியில் உள்ள ஆற்றல் எவ்வாறு நிறையாக மாறுகிறது, நிறை எங்கே போகிறது என்பதையும் விளக்குகிறது. மேலும், இச்சார்பியல் கொள்கையின் மூலம் கால-வெளி வரைபடத்தை வரைய ஏதுவாகிறது. இது காலப் பயணம் போன்ற சுவாரசியமான கருத்துகளுக்கு அடிகோலுகிறது.

ஓளியானது உண்மையில் தனித்தனி சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஒளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் மாக்ஸ்வெல்லின் மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையோடு முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்ஸ்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அண்டவியல், அணுவியல், குவாண்டம் எந்திரவியல், ஒளிமின் விளைவு எனப் பல துறைகளில் விளக்கங்களை தந்தவர். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கை என்பது இரண்டு நிலைகள்தான். ஏற்றமும் தாழ்வுமே அது. அதில், சரியாகப் பயணிப்பவர்களே வெற்றிபெறுகிறார்கள். இந்த வெற்றியின் பயணத்தில் ஐன்ஸ்டீனின் வாழ்வும் அடங்கும். இன்பமும், துன்பமும் அவரை எதிர்கொண்டபோது எந்தச் சூழலிலும் தன் வழியை மாற்றிக்கொள்ளாதவர். அதனால்தான் அவருக்கு மிக உயர்ந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தொகை அவருக்குக் கிடைத்தபோது, அதை வெறுக்கவே செய்தார். எதை நான் விரும்பவில்லையோ, அது என்னைத் தேடி வருகிறது என்று முணுமுணுத்தார். அத்துடன், தன் மனைவி எல்ஸாவிடம் இந்தப் பணம் நமக்குத் தேவையில்லை. பாதித் தொகையைத் தர்ம காரியங்களுக்கும் மீதித் தொகையை மிலீமாவுக்கும் (ஐன்ஸ்டீனின் முதல் மனைவி) கொடுத்துவிடலாம் என்றார். அவர், கருத்துக்கு என்றுமே மறுப்புச் சொன்னதில்லை எல்ஸா. அதனால்தான், அவர்களுடைய இல்லற வாழ்க்கையும் தேனாய் இனித்தது.

அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும் என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார். எளிமையானவர், ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம். மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார்.

கடைசிவரை எளிமையின் உறைவிடமாய் வாழ்ந்த ஐன்ஸ்டீனிடம், அமெரிக்காவில் இந்தியத் தூதராக இருந்த மேத்தா, ”நீங்கள் மகாத்மா காந்தி போன்றவர்” என்றார். அதற்கு ஐன்ஸ்டீன், ”தயவுசெய்து, என்னை அவரோடு ஒப்பிட்டுப் பேச வேண்டாம். அவர், மனிதகுலத்துக்காக நிறைய தொண்டு செய்திருக்கிறார். நான் என்ன செய்திருக்கிறேன்? ஏதோ, சில விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவ்வளவுதான் என்றார், அடக்கத்துடன். அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது என்று சொன்ன அந்த மாமேதை, கடைசிவரை அதேவழியில் பயணித்தார். மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது என்று வாழ்ந்து, வரலாற்றிலும் இடம்பிடித்தார்.

தற்காலத்தில் பொதுப்பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999-ல் புதிய ஆயிராமாவது ஆண்டை குறித்து வெளியிடப்பட்ட டைம் இதழ் இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதன் என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது. வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், புதிதாக எதையும் முயற்சிக்காதவர்களாகத்தான் இருக்க முடியும் என்ற வாழ்க்கையின் இலக்கணத்தை வளரும் தலைமுறையின் இதயங்களில் நிலைநிறுத்திய ஐன்ஸ்டீன், தாம் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ஒருகாலத்தில் ஆசிரியர்களால் அவமானப்படுத்தப்பட்டு, விரட்டப்பட்டார். அதனால்தான் அவர், குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு இப்படிச் சொன்னார், குழந்தைகளின் மனவியல் தெரியாது கற்பிக்கும் ஆசிரியர்கள், ஏறத்தாழ அவர்களுடைய மனவியல்பைக் கொல்லும் கொலைகாரர்களே. குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல என்பார்.

ஏப்ரல் 17, 1955ல், ஐன்ஸ்டீன் அடிவயிற்றின் அரோடிக் அனரிசைம் ஏற்பட்டதன் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்கான அறுவை சிகிச்சைக்கு ஐன்ஸ்டீன் மறுத்துவிட்டார். நான் விரும்பும் போது செல்ல விரும்புகிறேன். செயற்கை முறையில் வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதில் சுவாரசியம் இல்லை. என்னுடைய பங்கை நான் செய்திருக்கிறேன், இது போவதற்கான நேரம், நான் அதை நேர்த்தியாக செய்வேன்” என்றார். இயற்பியல் மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஏப்ரல் 18, 1955ல் தனது 76வது அகவையில் பிரின்ஸ்டன், நியூ ஜெர்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது மூளையானது இவர் இறந்து ஏழு மணி நேரங்களுக்குப் பின்னர் அகற்றப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அதிகமான அறிவே இவ்வாய்வுகளுக்குக் காரணமாகும். ஐன்ஸ்டீனின் மூளையில் எண், வெளி சார்ந்த செயலாக்க மூளையின் பகுதிகள் பெரிதாக இருக்க, பேச்சு, மொழி சார்ந்த பகுதிகள் சிறியதாக இருந்தன என அறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்தன. ஏனைய ஆய்வுகள் ஐன்ஸ்டீனின் மூளையின் நரம்புப் பசைக் கல எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனத் தெரிவித்தன.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.