• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

போலி நவரத்தின கற்கள் கொடுத்து பக்தர்களை ஏமாற்றிய பூசாரி..!

Byவிஷா

Mar 27, 2023

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஏமாற்று சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் பாம்பு வாந்தி எடுத்ததாகக் கூறி போலி நவரத்தின கற்களைக் கொடுத்து பூசாரி ஒருவர் பக்தர்களை ஏமாற்றிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில்தான் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுபற்றி எஸ். பி. அலுவலகத்தில் ஒருவர் புகார் கொடுத்தார். நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் புறநகர் பகுதியில் கோவில் ஒன்று தொடங்கினார். அங்கு வரும் பக்தர்களிடம் ஐ. ஏ. எஸ். அதிகாரியாக டெல்லியில் பணிபுரிந்து வந்தேன். ஆன்மீகம் மீது கொண்ட பற்று காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு இங்கு வந்தேன்.
இக்கோவிலுக்கு வருவோருக்கு நாக தோஷம் நீங்கும் என்று கூறி பூஜைகள் செய்தார். பாம்புகளுடன் வாழ்வதாகவும், இரவில் பாம்புகள் வாந்தி எடுக்கும் போது மாணிக்க கற்கள் கிடைத்ததாகவும் எங்களிடம் கூறினார். அந்த கற்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும் எனவும் தெரிவித்தார். பக்தர்களிடம் அந்த கற்களை கட்டாயப்படுத்தி வாங்க வைத்தார். இதன்மூலம் லட்சக்கணக்கில் அவருக்கு பணம் கிடைத்தது. இதன்மூலம் குறுகிய காலத்தில் சொகுசு கார்கள், பங்களாக்கள் கட்டினார். ஆனால் பூசாரி கொடுத்த நவரத்தின கற்கள், மாணிக்க கற்களை வாங்கி சென்றவர்களுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. அவர்கள் மேலும் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். இதுபற்றி பூசாரியிடம் கூறிய போது தன்னிடம் உள்ள ஸ்படிக லிங்கத்தை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், இன்னல்கள் அகலும் என்றார். அந்த ஸ்படிக லிங்கம் ரூ. 75 ஆயிரம் எனவும் தெரிவித்தார். இதனை நம்பி ஏராளமான பெண்கள் ஸ்படிக லிங்கத்தை வாங்கி சென்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் அவர் மோசடி கற்களை கொடுத்து ஏமாற்றினார். பூசாரியின் மோசடி தெரியவந்ததால் நாங்கள் கோவிலுக்கு செல்வதை தவிர்த்தோம். இந்த நிலையில் எங்களின் தந்தை உடல் நலக்குறைவால் இறந்தார். ஆனால் பூசாரியை நம்பாமல் இருந்ததாலேயே எங்களின் தந்தை இறந்தார் என்று அவர் கூறிவருகிறார். மேலும் எங்களை தீர்த்து கட்டிவிடுவதாகவும் கூறிவருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.