• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு

ByKalamegam Viswanathan

Mar 22, 2023

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த நிலையான வளர்ச்சி இலக்குகளின் கீழ் 2030ம் ஆண்டிற்குள் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வருடமும் பல்வேறு சிக்கல்களில் கவனம் செலுத்தி வருகிறது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் கல்வித் திட்டங்களின் அளவையும் தரத்தையும் அதிகரிக்கிறது, நமது பாரம்பரிய சொத்தான நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாத்து நிர்வகிக்கும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இயற்கை சமநிலையற்று சீர்குலைந்த சுற்றுச்சூழல் மனிதனுக்கு கிடைக்கின்ற நீரின் அளவையும் தரத்தையும் பாதிக்கிறது. இன்று உலகில் இருபத்து ஐந்து பில்லியன் மக்கள் வீட்டில் பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வருடத்தில் மாதத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். சுகாதாரமான குடிநீர் கிடைக்காதவர்களில் என்பது சதவீதத்தினர் கிராமப்பகுதிகளில் வசித்துவருகின்றனர். இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டிற்குள் குடிநீர் தட்டுப்பாடினால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கை எழுபது கோடி ஆக இருக்கும் என ஐ.நா சபை கணித்துள்ளது. பூமியில் வாழும் மூன்றில் ஒருவர் முறையான சுகாதார வசதி இல்லாமல் உள்ளனர். நான்கில் ஒரு மாணவருக்கு பள்ளியில் குடிநீர் வசதி இல்லை என்பதால் சுகாதாரமற்ற குடிநீரை அருந்தும் அவலநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

பூமியில் முப்பது சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள எழுபது சதவீதம் நீர்ப்பரப்புதான். எழுபது சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலகமக்கள் விவசாயத்திற்கும் தங்களுடைய தேவைக்கும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இன்று முப்பது விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது. இந்நாளின் முக்கியத்துவம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப்பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்சனையை தீர்ப்பதும் .மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவதைக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் ஆகும். மேலும் இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த பஞ்சபூதங்களையும் மாசு படுத்துகின்றனர்.

ஆண்டுதோறும் நாற்பது ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுபடுத்தி வருகின்றன. நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட்டு நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் தினமும் நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சுகாதாரமற்ற தண்ணீரால் ஏற்படும் தொற்றுநோயால் இறப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மாசுபட்ட குடிநீரால் டைபாய்டு, அமிபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கி புழு, தோல் நோய், காது வலி, கண் நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் ஏற்படுகிறது. தண்ணீர்த் தேவைக்கு மழையையும் ஆறுகளையும் ஏரிகளையும்தான் நம்பி இருக்கிறோம்.

இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் குடிநீர்ப்பஞ்சம் ஏற்படும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு காரணம், போதிய மழையின்மையும், ஏரிகள் வறண்டு வருவதுமே ஆகும். இன்று நகரமயமாக்கல் என்ற பெயரில் நீர்நிலைகளை அழித்துக் குடியேறியதன் விளைவுதான் இன்றைய குடிநீர்ப்பஞ்சத்திற்கு காரணம். முன்பெல்லாம் கோடைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே ஒரு பாத்திரத்திலோ அல்லது பானையிலோ தண்ணீர் வைக்கப்படும். அந்த வழியாகச் செல்லும் வழிப்போக்கர்கள் பானையில் உள்ள நீரை அருந்தி தனது தாகத்தைத் தணித்துக்கொள்வர். இன்றைய நிலையில் அதுபோன்ற காட்சிகளை எங்கும் காணமுடிகிறதில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான ஆறுகள் இன்று வறண்ட நிலையிலும், கழிவுநீர் கலக்கப்பட்டும் மாசுகள் நிறைந்தும் காணப்படுகின்றன. இதற்கெல்லாம் பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் திட்டம் முழுமையாக நடந்து வளமடைந்ததா என்பது கேள்விக்குறிதான்.

கிராமப்புறங்களில் வாழும் இந்தியர்களில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது என்று ஒரு அறிக்கை கூறுகிறது. தமிழ்நாடு தண்ணீருக்காக இன்று அண்டையில் இருக்கும் மூன்று மாநிலங்களை சார்ந்து இருக்கவேண்டிய நிலையைத்தான் காண்கிறோம். தண்ணீருக்குத் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி என்ற சொல்லைக் காட்டி இயற்கை எரிவாயுவையும் அணு உலையையும் தீர்வாகத் தந்துள்ளது, மத்திய அரசு. இந்த வளர்ச்சி என்ற சொல் தமிழ்நாட்டு விவசாயிகள் தண்ணீரின்றி வறட்சியால் உயிர்விடும்போது எங்கே போனது என்று உணரவில்லை. இந்த ‘உலக தண்ணீர் தினம்’ என்பது கோடைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் தண்ணீரைப் பற்றிய விழிப்பு உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. ‘தண்ணீர் ஒரு மனிதனின் வாழ்வாதாரம்’ என்பதை ஒவ்வொரு குடிமகனும், அந்நாட்டு அரசும் புரிந்துகொள்ளும் வரையில் இதற்குத் தீர்வு கிடைக்காது. தமிழ்நாட்டில் வரும் கோடைக்காலம் வரலாறு காணாத வறட்சியாக இருக்கும் என்ற எச்சரிக்கையோடு தண்ணீரை இப்போதிருந்தே சேமித்துப் பயன்படுத்த ஆரம்பிப்போம்.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி, சுற்றுச்சூழல் முன்னோக்குடன் பசுமை திட்டங்களை அமைத்து மறுபரிசீலனை செய்யாவிட்டால் இந்தியா 2050ல் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையும் அதனால் மிகப்பெரிய பாதிப்புகளும் பக்கவிளைவுகளும் ஏற்படுத்தும். “நமது உடல் நலம் பாதிக்கபடுமாயின், நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்ற கூற்றினை நாம் அனைவரும் அறிவோம்”. ஆனால் வளமான சுற்றுச்சூழலை நாம் இழக்க நேரிடுமாயின் நமது அடிப்படையான வாழ்வே இழக்கப்பட்டுவிடும் என்ற உண்மையினை நாம் இன்னமும் அறிய வேண்டிய நிலையில் உள்ளோம். தற்போது மாறிவரும் சுற்றுச்சூழலை உணரும் நெருக்கடியான காலம் வந்துவிட்டது. மக்கட்தொகை பெருக்கம், மிதமிஞ்சிய நகரயமயமாகுதல், பயிரிடும் நிலங்கள் குறைந்துவருதல், சாலையில் ஓடும் வாகனப்பெருக்கம், உலகளாவிய வெப்பநிலை, காடுகள் அழிதல், தொழிற்சாலை மயமாகுதல், மக்களிடையே மாறிவரும் நுகர்வுத் தன்மை, மனிதர்களின் செயல்களால் அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் இயற்கைவளங்கள் போன்றவைகள் அனைத்தும் நாம் பூமியில் வாழும் அடிப்படை வாழ்க்கையையே அச்சுறுத்தலுக்குள்ளாக்கியுள்ளது.

நமது சுற்றுச்சூழல் சீர்கேடு அடைந்துவருவதை இத்தகைய தருணத்திலாவது நாம் உணா்ந்து எச்சரிக்கையுடன் இருக்காவிடில் அனைத்து வளங்களையும் நாம் இழக்க நேரிடும். உலகின் சுற்றுச்சூழலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த காலக்கட்டத்தில் குறிப்பாக கீழ்காணும பத்து காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

  1. மிகப்பெரிய அளவில் பனிமலைகள் உருகும்.
  2. கடல் மட்டம் உயரும் அல்லது கடல் உள்வாங்கும். இதனால் மிகப்பெரிய நிலப்பரப்புகள் நீருக்குள் மூழ்கடித்து கோடிக்கணக்கான மக்கள் இறக்கவும் நேரிடும்.
  3. மழை பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். இதனால் உலக தானிய மற்றும் உணவு பொருட்களின் உற்பத்தி குறைந்து விடும்.
  4. வறட்சி அதிகரிக்கும். இதனால் மக்களின் இடப்பெயர்ச்சி அதிகரிக்கும்.
    5.புயல்களும் சூறாவளிக்காற்றுகளும் அதிகரித்து எண்ணிலடங்கா நாசமோசங்களை ஏற்படுத்தும்.
  5. நீர்வள பாதிப்புகள் அதிக அளவில் நிகழும்.
  6. உயிர்ச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு பல உயிரினங்கள் மறைந்து விடும்.
  7. வேளாண் உற்பத்தி குறையும். இதனால் மக்கள் இயற்கை உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும்.
  8. நோய்கள் அதிகரிக்கும். மருத்துவ சிகிட்சைகள் பலன் அளிக்காமல் போகும்.
  9. 2050-ஆம் ஆண்டுடன் பூமியின் தண்ணீரின் அளவு மூன்றில் ஒரு பகுதியாக குறையும்.

“மரங்களை நாசம் பண்ணு, அப்போது மண்வளம் அழியும்,
மண்ணை நாசம் பண்ணு, நீர்வளம் அழியும்,
நீரை நாசம் பண்ணு, அப்போது தேசம் அழியும்.
அப்போது நீ பாலைவனத்தை உடைமையாக்கி கொள்வாய்”.
ஆகையால் ஒரு தேசத்தின் பலம் அதன் மண்ணை சார்ந்திருக்கிறது என்ற உண்மையை அறிந்து செயல்படுவோம்.

நான் இயற்கைக்கும் அதன் வளத்திற்க்கும் எவ்வித தீங்கும் விளைவிக்காமல் பாதுகாப்பேன் என்றும் என்னையோ அல்லது மற்றவர்களையோ சூழலுக்கு எதிரான யாதொரு செயல்களிலும் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் மாசுபடல், இயற்கைவளம் குன்றல், உயிரின் பன்மய இழப்பு, அடிப்படை வசதிகள் போன்ற சூழ்நிலை பிரச்சினைகளை இயற்கையோடு சேர்ந்து தீர்வு காண்பேன் என்றும் நாட்டின் வளம் குன்றாத வளர்ச்சிக்கு என்னுடனிருப்பவர்கள் இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான சுற்றுச்சூழலைப் பற்றி அறியும்படி செய்வேன் என்றும் நான் இதன் மூலம் உளமார உறுதியளிக்கிறேன். ஒவ்வொரு துளி நீரையும் காப்போம்.

பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட வேண்டும். வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க வேண்டும். ஷவரில் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணாக்கக் கூடாது. ‘ஷவரில் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம். தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம் என்ற உறுதிமொழியை ஏற்று அதை நிறைவேற்ற பாடுபடுவேன்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.