• Sat. Apr 27th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 1, 2023

சிந்தனைத்துளிகள்

இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்..!

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார்.
“இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.
சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார்.
“என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர்.
தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார்.
“இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர்.
“இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார்
“இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர்.
அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உலகை விட்டுப் போனால் சிறு ஊசியைக் கூட கொண்டு போக முடியாது என்று நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் நினைத்ததை சாதிக்கும் வலிமை இருப்பதாக தற்பெருமை பேசுகிறீர்களே.

ஒருவன் செய்த நன்மை தீமை மட்டுமே இறந்த பிறகு கூட வரும். செல்வத்தால் யாரும் கர்வப்படத் தேவையில்லை. அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும்,” என்று அறிவுரை கூறினார்.
வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் நம்முடன் வருவது, நமது நற்செயல்களால் கிடைத்த புண்ணியங்கள் மட்டுமே எனவே, இருப்பதை மற்றவருக்கு கொடுத்து வாழுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *