• Fri. May 3rd, 2024

ஐஸ்லாந்தில் 800 முறை நிலநடுக்கம்..!

Byவிஷா

Nov 11, 2023

ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர். மிக சமீபத்தில் மனிதர்கள் குடியேறிய நாடும் அதுவே. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு சுற்றுலா நாடாக மாறியுள்ளது. உலகின் மிகப் பழைய குடியரசு நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று.

உலகின் மிகவும் அமைதியான நாடு என்று பெயர்பெற்ற ஐஸ்லாந்து நாட்டில், இங்கு 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. நாட்டின் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவானது. இதையடுத்து அந்நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தளமான புளூ லகூன் மூடப்பட்டது.

நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளன. இது ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 4,000 பேரைக் கொண்டிருக்கும் கிரிண்டாவிக், இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து தென்மேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் உடனடியாக மக்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களும் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவற்றின் ஒருபகுதியாக, கிரிண்டாவிக்கில் அவசரகால முகாம்கள் திறக்கப்பட்டு, பாதுகாப்புக்காக ரோந்துக் கப்பலான தோர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. கூடவே, மூன்று இடங்களில் தகவல் மையங்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கடந்த அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலிருந்து இதுவரை சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *