வாஷிங்டனில் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 67 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது. இந்த விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க ராணுவத்திற்குச் சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் ரோனால்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில் 3 ராணுவ வீரர்கள் பயணித்தனர்.
இந்த நிலையில் தரையிறங்க முயன்ற விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதனால் விமானமும், ஹெலிகாப்டரும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர், ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விமானத்தின் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அதை ஆய்வு செய்தபின்பே இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.