• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சூடான் வான்தாக்குதலில் 54 பேர் உயிரிழப்பு: ராணுவம் மீது குற்றச்சாட்டு!

ByP.Kavitha Kumar

Mar 26, 2025

சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் 54 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதன் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் பல்வேறு முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் காரணமாக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடந்த 2023 ஏப்ரல் 15-ம் தேதி முதல் கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல்-பாஷருக்கு வடக்கே உள்ள தோரா கிராமத்தில் நேற்று முன்தினம் பயங்கர வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 54 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலை ராணுவம் நடத்தியதாக துணை ராணுவப்படை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அதனை ராணுவம் மறுத்துள்ளது.