



சிவகங்கை மாவட்டம் சருகணி திருஇருதயங்களின் ஆலயத்தில் இயேசு சபைத் துறவி, இறை ஊழியர் லூயி லெவே 52-ஆம் ஆண்டு விண்ணகப் பிறப்பு நினைவு விழா சருகணியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு ஆயர் ஆனந்தம் தலைமையில் அருட்பணியாளர்கள் இணைந்து நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில், தமிழகத்தின் பல்வேறு மறை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 3000க்கும் மேற்பட்ட இறைமக்களும், நூற்றுக்கும் மேற்பட்ட அருள் சகோதரிகளும் கலந்து கொண்டனர்.



சருகணி தேவாலயத்தின் இறைமக்கள், தங்களின் ‘நேசத்தந்தை’ என்று போற்றும் இறை ஊழியர் லெவே அவர்களின் உருவப்படத்தை, தாங்கிய சப்பரம் வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச்சென்று, அவரது பரிந்துரை வழியாக, இறைஆசீரை மன்றாடினர்.
இறுதியாக, அனைத்து மதங்களையும் சார்ந்தோர் வழங்கிய காணிக்கைகளைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட உணவு, அனைவருக்கும் வழங்கப்பட்டது. பிறமத மக்களும் சமபந்தி விருந்தில் கலந்து கொண்டனர்.



தந்தை லெவே, ஏழைகளுக்கு உணவு வழங்கிய நற்பண்பை நினைவுகூரும் வகையில், கடந்த 52 ஆண்டுகளாக, அவரது மறைவின் நினைவு நாளில், அன்னதானம் எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. அருட்தந்தை லூயி மரிய லெவே 6 ஏப்ரல் 1884 அன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள ரென் மறைமாவட்டத்தில் உள்ள இலாலி என்ற ஊரில் பிறந்தவர். இவர் இயேசு சபை குருவானவர். 13.1.1920 இல் குருவாக அருட்பொழிவு பெற்று. சருகணி திருச்சபையின் அருட்தந்தையாக பணியாற்றி திருச்சபை மக்களுக்கு சேவையாற்றினார். 1956 முதல் 1973ல் உயிர் பிரியும் வரை சருகணியில் ஆன்மீகக் குருவாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.


