


மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே முறையாக சர்வீஸ் சாலை அமைக்காததால் ரயில்வே மேம்பாலத்திற்கு கிழக்குப் பகுதியில் உள்ள கிராம மக்கள் உசிலம்பட்டி திருமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்வதில் தற்போது வரை சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். சர்வீஸ் சாலை உடனடியாக அமைத்து அனைத்து மக்களும் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி முன்னாள் தலைவர் பழனியப்பன் கூறுகையில்
பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருமங்கலம் உசிலம்பட்டி செக்கானூரணி போன்ற புறநகர் பகுதிகளுக்கு சோழவந்தான் ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரிஷபம் திருமால் நத்தம் ராயபுரம் ஆலங்கொட்டாரம் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள் ரயில்வே கேட்டை தாண்டி ஆபத்தான நிலையில் செல்ல வேண்டி இருப்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்.

இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஆக இருந்த செல்வி ஜெயலலிதா அவர்களால் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் சோழவந்தான் ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடைபெற்று ஒரு வழியாக கடந்த 2021 ஆம் ஆண்டு பணிகள் முடிந்து ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.
ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள பகுதிகளில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சர்வீஸ் சாலை அமைக்காததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே மேம்பாலத்தில் மேலிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள கிராமங்களான ரிஷபம் ராயபுரம் திருமால் நத்தம் சோழவந்தான் பேரூராட்சிக்குட்பட்ட ஆலங்கொட்டாரம் பசும்பொன் நகர் ஆகிய பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மேம்பாலத்தின் கீழே உள்ள நிலத்தின் உரிமையாளர்களிடம் பேசி நிலத்தை கையகப்படுத்துவதில் முறையான திட்டமிடுதல் இல்லாமல் நிலத்தை கையகப்படுத்த முடியாமல் சர்வீஸ் ரோடு அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரயில்வே மேம்பாலம் அமைத்தும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது வரை ஆபத்தான முறையில் ரயில்வே கேட்டை தாண்டியே சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகையால் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள இடங்களை சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரிடம் பேசி சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்போன்ற எனஅரசுக்கு கோரிக்கை அளித்துள்ளார்.

