• Fri. Mar 29th, 2024

5 மாநில தலைவர்கள் நீக்கம்…புத்துயிர் பெறுகிறதா காங்கிரஸ்?

உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பொறுப்பை ராஜிநாமா செய்யுமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார்.

இந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ், அங்கும் பெரும் சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இத்தோல்வி குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று (மார்ச் 15) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற சில தலைவர்கள் பங்கேற்கவில்லை.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமெய்ரக்பம் லோகேன் சிங் ஆகியோரை நீக்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதேநேரம், இந்த மாநிலங்களின் காங்கிரஸ் பொதுச் செயலர்கள் மற்றும் பொறுப்பாளர்களை ராஜிநாமா செய்யுமாறு சோனியா கூறவில்லை. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று மூத்த தலைவர்கள் மத்தியில் குரல் எழுப்பப்பட்டதால் இந்த முடிவை தலைமை எடுத்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் ஆகியோர் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலை தாக்கி பேசினர்.

காந்திகள் (சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி பிறருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தனர்.

‘அவர் (கபில் சிபல்) மிகப் பெரிய வழக்கறிஞர். அதில் ஒரு சந்தேகமும் இல்லை. அவர் காங்கிரஸில் இணைந்தார். ஆனால், அவருக்கு கட்சியின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பற்றி புரியவில்லை.எம்எல்ஏ, எம்பி, அமைச்சர், முதல்வர் என பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றால் அடிமட்டத்தில் இருந்து உழைக்க வேண்டும். சிலருக்கு அது எதுவுமே புரியவில்லை.

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் ஒத்துழைப்பால் கிபல் சிபல் சில முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் மத்திய அமைச்சராகவும், கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் ஆகியிருக்கிறார். காங்கிரஸ் குறித்து ஏபிசிடி கூட தெரியாதவர் இத்தனை பொறுப்புகளை வகித்திருக்கிறார் என்பது துரதிருஷ்டவசமானதாகும்’ என்று அசோக் கெலாட் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பூபேஷ் பாகெல் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், ‘காங்கிரஸ் என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறது. ஆனால், அதை சிலர் டின்னருக்காகவும், தங்கும் இடமாகவும் மாற்ற முயற்சி செய்கின்றனர். ஒரு முறையாவது நீங்கள் உத்தரப் பிரதேசம் வந்திருக்கிறீர்களா? வந்து பார்த்தால் தான் தலைமை மற்றும் தலைமைக்கான சண்டை என்றால் என்ன என்று’ என குறிப்பிட்டிருந்தார்.

தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் தலைவர்களையும் ராஜிநாமா செய்யுமாறு சோனியா கோரினார் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.
‘இது மேலோட்டமான நடவடிக்கை தான். கட்சியை மீட்க இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொதுச் செயலர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் பாயவில்லை. அவர்களையும் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். பிரியங்கா காந்தி இன்னும் ராஜிநாமா செய்யவில்லை.

இவர் உத்தரப் பிரதேசத்தின் பொதுச் செயலர் மற்றும் பொறுப்பாளர் ஆவார். இதேபோன்று பஞ்சாப் பொறுப்பாளர் ஹரீஷ் செளதரி, உத்தரகாண்ட் பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் ஆகியோரையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றிய நிலையில், அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் பிரியங்கா இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் லல்லு தனது பொறுப்பை ராஜிநாமா செய்தார். தோல்விக்கும் பொறுப்பேற்பதாக அவர் அறிவித்தார். கோவா காங்கிரஸ் தலைவர் சோடங்கரும் தோல்வியை ஒப்புக் கொண்டு ராஜிநாமா செய்தார். இதேபோல், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் கொடியால் தனது பொறுப்பை ராஜிநாமா செய்வதாக டுவிட்டரில் குறிப்பிட்டார்.

உத்தரகாண்டில் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், பல தொகுதிகளை எதிர்க்கட்சிகளுக்கு பணத்தை வாங்கிக் கொண்டு விட்டுக்கொடுத்துவிட்டதாக அந்த மாநில காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதல்வருக்கு எதிராக இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைத்த நபரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஹரீஷ் ராவத் கொந்தளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *