சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, டுடீ சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சென்னையின் பிரதான சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, அண்ணா சாலை, ராஜாஜி சாலைகளில் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
இந்நிலையில் வான் சாகச நிகழ்ச்சியை காண வந்த 230 பேருக்கு நீர்சத்து குறைபாடு ஏற்பட்டது. பலரும் கூட்ட நெரிசல் மற்றும் வெயில் காரணமாக மயக்கமடைந்து கீழே விழுந்தனர். கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), குரோம்பேட்டை சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூர் கார்த்திகேயன்(35) , தினேஷ் (37) மற்றும் ஒருவர் என 4 பேர் மருத்துவமனைகளில் உயிரிழந்தனர். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 44 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 41 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
40 ஆம்புலன்ஸ்கள் மூலமாக 93 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலி
