• Tue. Apr 22nd, 2025

வாழைத் தோட்டத்தில் பாய்ச்சிய உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி.., பழங்குடி பெண்கள் கண்ணீர்…

BySeenu

Apr 15, 2025

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில். சாவித்திரி, விஜயா, மங்கலம் மற்றும் கண்ணம்மா 4 பெண்கள் 40 க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஆடு மேய்க்க சென்று உள்ளனர். ஆடு மேய்த்து விட்டு திரும்பி மலை கிராம பகுதிக்கு வந்த பொழுது, தண்ணீர் தாகத்துடன் இருந்த ஆடுகள் அங்கு உள்ள வாழை தோட்டத்தில் பாய்ச்சி இருந்த நீரை பருகி இருக்கின்றன. அப்பொழுது ஆடுகள் மயங்கி விழ ஆரம்பித்து பரிதாபமாக பலியாகின. வாழை தோட்ட விளைச்சலுக்காக, உர கரைசல் தண்ணீரில் கலந்து விட்டு இருந்த நிலையில், வெள்ளாடுகள் அதனை பருகியதால் பலியானது பின்னர் தெரிய வந்தன.

தண்ணீர் தாகத்திற்கு வெள்ளாடுகள் உரம் கலந்த நீரை பருகியதால் பலியான ஆடுகளின் உடல்கள் உடற்கூறாய்வு செய்து புதைக்கப்பட்டன.

பழங்குடி பெண்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருக்கிறது. ஆடுகளை குறைந்த அளவில் வாங்கி அதனை வளர்த்து பெருக்கி அடுத்த மாதம் பக்ரீத்துக்கு விற்க வேண்டிய நிலை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையிலே ஆடுகள் பலியாகி பெரும் நட்டத்தை ஏற்படுத்தி இருப்பதனால், மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் பழங்குடி பெண்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வலுத்து இருக்கின்றன.