கோவை ஜி.ஆர்.டி. கலைக் கல்லூரியில் 38-ஆவது கோயம்புத்தூர் அளவிலான கராத்தே போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 60″க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து எல்.கே.ஜி. முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான 1,500″க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

சனிக்கிழமை நடைபெறும் இப்போட்டியில் 2,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக கராத்தே கூட்டமைப்பு விதிகளின்படி, கற்பனைச் சண்டையான ‘கட்டா’ மற்றும் நேரடிப் போட்டியான ‘குமித்தே’ ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்படுவதுடன், முதல் பரிசு வெல்பவர்கள் ஜூன் மாதம் மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான கராத்தே போட்டிக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோயம்புத்தூர் கராத்தே அசோசியேஷன் தலைவர் டாக்டர் கராத்தே வீரமணி,
கடந்த ஆண்டு ‘நோ ட்ரக்’ (No Drug) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் சென்றடைந்ததைக் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு ‘ஒய் கராத்தே’ (Why Karate) என்ற கருப்பொருளில் போட்டி நடத்தப்படுவதாகவும், கராத்தே என்பது தற்காப்பு மட்டுமின்றி சுயக்கட்டுப்பாடு மற்றும் மனக்கட்டுப்பாட்டை வளர்க்கும் வாழ்க்கைப் பயிற்சி என்றும் தெரிவித்தார்.
அனைத்துக் கல்லூரிகளிலும் கராத்தேயை அறிமுகப்படுத்தினால், மாணவர்களிடம் சுயக்கட்டுப்பாடு உருவாகி போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், போட்டிகளில் தவறுகள் நடக்காமல் தடுக்கவும், திறமையான வீரர்களைத் துல்லியமாகத் தேர்வு செய்யவும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக எட்டு போர்டுகளுக்கும் தலா எட்டு கேமராக்கள் பொருத்தி போட்டி நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

கராத்தே சங்கங்களை ஒரே சங்கமாக ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கேரள நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டிலும் சங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளி விளையாட்டுத் தேர்வுகளில் தங்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வாகி, அரசு ஊக்கத்தொகை பெற்று வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை சீனியர் மற்றும் இதர பிளாக் பெல்ட் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


