தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சிறுமியை மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ராமர் என்பவர் சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை அறிக்கை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இன்று விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, ராமர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்தது.
இதையடுத்து, 2019-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட போக்சோ சட்டப்பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி எழில் தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


