• Thu. Apr 25th, 2024

தேசிய பாரா ஒலிம்பிக்கில் 3 தங்கம் குவித்தவர், தேனி கலெக்டரிடம் மனு

பெங்களூருவில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் போட்டியில், கூடலுார் மாற்றுத்திறனாளி 3 தங்கம் குவித்து தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார். விளையாட்டில் மேலும் சாதிக்க உதவ வேண்டி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தார்.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தம்மணம்பட்டியை சேர்ந்த சபாபதி மகன் மனோஜ்குமார்( வயது 30 ). மாற்றுத்திறனாளியான இவர் பிளஸ் 2 படித்துள்ளார். தற்போது கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் முறையாக பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். இதன் பயனாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை 11 தங்கம், 10 வெள்ளி பதக்கங்களை குவித்துள்ளார்.


அதற்கும் ஒரு படி மேலாக இவர் கடந்த டிச., 19 மற்றும் 20ம் தேதி பெங்களூருவில் நடந்த தேசிய பாரா ஒலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 100, 200 மற்றும் 400 மீட்டர் வீல்சேர் பந்தயத்தில் 3 தங்கம் வென்றுள்ளார்.

வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன், தங்கம் குவித்த கையோடு தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்து பாராட்டு பெற்றார்.


கலெக்டரிடம் மனோஜ் குமார் அளித்த மனுவில், “கோவையில் தனியார் உணவகத்தில் பணி செய்து வருகிறேன். நெருங்கிய நண்பர்கள் உதவியில் தான் போட்டியில் பங்கேற்று வருகிறேன். விளையாட்டில் சாதிக்க நினைக்கும் எனக்கு வறுமை தடையாக உள்ளது. இந்தியாவில் 11 பேர், தமிழகத்தில் 2 பேர், தேனி மாவட்டத்தில் நான் மட்டும் உள்ளேன். பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்த, அரசு எனக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என அம்மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *