• Fri. Apr 19th, 2024

2021-ன் சாதனைப் பெண்கள்

Byகாயத்ரி

Dec 30, 2021

ஒவ்வொரு ஆண்டும் தடைகளைத் தகர்த்தி பெண்கள் முன்னேறி கொண்டிருக்கின்றனர்.இந்த கொரோனா எனும் பெருந்தொற்றால் பலரும் பல துறைகளில் பாதிக்கப்பட்ட போதிலும் அதே துறையில் பல பெண்கள் சாதித்தும் உள்ளனர்.இத்தகைய பெருமைமிக்க நம் சாதனை பெண்களை சற்றுத் திரும்பி பார்க்கும் நேரம் இது….

*அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதிவியேற்ற விழாவில் கவிதை வாசித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தார் 22 வயது அமெண்டா.அமெரிக்க வரலாற்றிலேயே பதவியேற்பு விழாவில் கவிதை வாசித்த இளம் வயதுப் பெண் என்ற பெருமையும் இந்த பெண் பெற்றுள்ளார்.

*உலக வர்த்தக சபையின் இயக்குநராக 2021 மார்ச் முதல் செயல்பட்டு வருகிறார் எங்கோசி ஒகோன்ஜோ இவலோ.இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் கறுப்பினத்தவர் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

*’நோமாட்லேண்ட்’ படத்தை இயக்கிய சீன இயக்குனர் க்ளோயி ஸாவோ திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்ற இரண்டாம் பெண் என்ற கௌரவத்தை பெற்றுள்ளார்.

*மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை சார்பில் உயரடுக்கு கமாண்டோ படையான ‘கோப்ரா’ பிரிவில் 34 பெண்கள் இணைக்கப்பட்டனர்.பெண்கள் மட்டுமே கொண்ட உலகின் முதல் கமாண்டோ படை இது என்று காலரைத் தூக்கி சொல்லிக்கொள்ளலாம்.

*சாதிக்க வயது ஒரு தடையில்லை என்ற வாக்கியத்திற்கு விடை அளித்தார் 105 வயது விவசாயி பாப்பம்மாள்.கோயம்புத்தூர் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பம்மாள் தன் இரண்டரை ஏக்கர் நிலத்தில் பயிறு வகைகளை இயற்கை முறையில் பயிரிட்டுவந்தார்.நம் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை தட்டி தூக்கியுள்ளார் இந்த 105 வயது சாதனைப் பெண்.

*பாகிஸ்தான் நிர்வாகப் பணிக்கு முதல்முறையாகத் தேர்வான இந்து பெண் சனா ராம்சந்த்.இது இந்திய ஆட்சிப் பணிக்கு ஒப்பான ஒன்று.பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஷிகார்பூர் மாவட்டத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் சனா என்பது குறிப்பிடத்தக்கது.

*நாசாவின் பெர்சிவியரன்ஸ் ரோவர் விண்கலத்தை வான்வெளியில் அதற்குரிய பாதையில் வழிநடத்தி செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் பணியைச் செய்த குழுவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஸ்வாதி மோகன் வழிநடத்தி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார்.

*சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளையும் சேர்த்து 10 ஆயரம் ரன்களை அடித்த இரண்டாம் வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற இரு பெருமைகளையும் பெற்றுள்ளார் மிதாலி ராஜ்.

*சீனாவின் ஜிங்ஜாங் மாகாணத்தில் செயல்பட்டுவந்த ரகசிய சிறைச்சாலை குறித்து ஆதாரத்துடன் நிறுவியதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இதழாளர் மேகா ராஜகோபாலன், சர்வதேச செய்தி வழங்கலுக்கான புலிட்சர் பரிசை வென்றார். பெண்கள் பதுங்கி பாயும் புலி என்பதற்கு இவரே ஒரு எடுத்துக்காட்டு.

*தன் பத்து வயதிலேயே சிறுவர் அமைப்பான பால சங்கத்தில் இணைந்து பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் செயல்பட்டு வந்தவர் ஆர்யா ராஜேந்திரன்.கேரளத்தை சேர்ந்த இந்த கல்லூரி மாணவி தான் இந்தியாவின் இளம் வயது மேயர்.பெண் நினைத்தால் எதுவும் சாத்தியமே..!

எந்த பெண்ணாலும் முடியாது என்ற ஒன்று கிடையாது என்பதை இப்பெண்கள் நிரூபித்துள்ளனர். விழுந்தால் நட்சத்திரமாக விழ வேண்டும் என்பது அனைத்து பெண்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சாதனைப் பெண்களே சான்று.நிமிர்ந்து நில் துணிந்து செல்…!மீண்டும் சாதனைப் பெண்களின் பட்டியல் நீண்டுக்கொண்டே இருக்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *