• Thu. Apr 25th, 2024

‘அழகி’ பயணம் தொடங்கி 20 ஆண்டுகள்!

‘அழகி’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அப்படம் குறித்த தனது நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது இணைய பக்கங்களில் பகிர்ந்துள்ளார்..

2002-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உள்ளிட்டோர் பலர் நடித்திருந்த இப்படம் சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருதை வென்றது. படத்துக்கு இசையமைத்திருந்தார் இளையராஜா. இப்படத்தில் இடம்பெற்ற ‘பாட்டுச் சொல்லி’ என்ற பாடலுக்காக சாதனா சார்கம் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை வென்றார்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘அழகி’ குறித்த நினைவுகளை நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “அழகி வயது 20!”

ஊரான் காதலை ஊட்டி வளத்தா, தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க…

அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!) எப்டி^ Bracket^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்!

சரி matterக்கு வருவோம்…
அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம், ஒப்பனையில்லா நிஜத்தன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்து போன (அ) நொந்து போன காதல் வடு ‘அழகி’!

தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20) வருட இன்னொரு காரணம் இசை alias இளையராஜா. நந்திதாதாஸும் நந்தியாக தேவையானியும் தேவையா நீ என்றளவில் நானும் (கையாலாகா காதலன்-காதலை தவிர காதலியை காப்பாற்ற ஏதுமற்றவன்) வாழ்ந்திருப்போம்.

சண்முகத்தின் பார்ட் 1, பார்ட் 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால், பார்ட் 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த முயற்சிக்கிறார் தங்கர். ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2” என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

இதே போல இயக்குநர் தங்கர்பச்சான் தனது ட்விட்டர் பதிவில், “தனலட்சுமி-சண்முகத்தின் கதை ‘அழகி’-யாக உருவெடுத்து இருபது ஆண்டுகளுக்கு முன் இன்றைய நாளில்தான் மக்களின் மனங்களில் ஊடுருவினாள்! அழகி வெளியான இன்றைய நாளில் நானே உடன் இருந்து விடிய விடிய ஒட்டிய சுவரொட்டியை தங்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *