உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பேருந்து ஒன்று சினிமா பாணியில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோயிலில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை குமார் என்பவர் ஓட்டிக் கொண்டு வந்தார். இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் வந்து கொண்டிருந்தது.
தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில் போதிய அறிவிப்பு பலகையும் இல்லாததால் சர்வீஸ் சாலையில் சென்ற பேருந்து சாலையின் தடுப்பு கட்டையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்னி பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 20 பேர் காயம்
