சென்னை அசோக் நகர் 12-வது அவென்யூவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் தரைத் தளத்தில் பழக்கடையும், முதல் மற்றும் 2-ம் தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. அந்த குடியிருப்பின் முதல் தளத்தில் ஜானகி (92) என்பவர் தனது மகள் ஜெயா (59) உடன் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜானகியை கவனித்து கொள்வதற்காக மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரியா (27) என்ற செவிலியரை பணிக்காக மகள் ஜெயா நியமித்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் செவிலியர் ஜெயப்பிரியா இங்கு பணிக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜானகியும், செவிலியர் ஜெயப்பிரியாவும் படுக்கை அறையிலும், ஜெயா ஹாலிலும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு சமையல் அறையில் இருந்த பிரிட்ஜ் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுதும் கரும்புகை சூழ்ந்தது. இதைகண்டு ஜெயா கூச்சலிட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்த போது கதவு உள்பக்கம் தாழ்பாள் போட்டிருந்ததால் தீயணைப்பு துறைக்குத் தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் அசோக் நகரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஜன்னலை உடைத்து தீயை அணைத்தனர்.
படுக்கையில் மயங்கிய நிலையில் கிடந்த செவிலியர் ஜெயப்பிரியா, மூதாட்டி ஜானகியை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால், செவிலியர் ஜெயப்பிரியா முச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரிட்ஜ் வெடித்ததில் 2 பேர் மூச்சுத்திணறி பலி
