தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு சாலையில், மருங்குளத்தில் உள்ள தனியார் அரிசி ஆலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளது.
இந்நிலையில் ஆலை கிடங்கில் நெல் மூட்டைகள் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உமாமகேஸ்வரி மற்றும் குடிமைபொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் மாலையில் திடீரென அந்த அரிசி ஆலைக்கு சென்றனர் .அப்போது, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 ஆயிரம் நெல் மூட்டைகள் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள முத்திரை பதித்து இருந்திருந்த 330 சாக்குகளையும் பறிமுதல் செய்தனர் .
மேலும் பறிமுதல் செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உமாமகேஸ்வரி கூறும்போது : இந்த குடோனுக்கு எப்படி நெல் மூட்டைகள் வந்தது என்பது தெரியாது எனவும் எவ்வித ஆவணங்களும் இல்லாததால் இந்த நெல் மூட்டைகளை பறிமுதல் செய்துள்ளோம் என தெரிவித்தார் .
அதே போல் கொள்முதல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் 330 சாக்குகளில் லாட் எண்கள் இல்லாததால், எந்த கொள்முதல் நிலையத்திலிருந்து வந்தது தெரியவில்லை எனக் கூறினார்.
இருந்தாலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நெல் மூட்டைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் போலீஸாரும் விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டுபிடிப்பார்கள் என தெரிவித்தார் . மேலும் கொள்முதல் நிலையம் என்பது விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் வியாபாரிகள் நெல்லை கொண்டு வந்து கள்ளத்தனமாக விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்