
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நெடுங்காலமாக புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இயற்றி உள்ளது.
ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 16 வது முறையாக தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனி மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் ரங்கசாமியும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில்,புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.,நேரு தலைமையில் 22-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து மாநில அந்தஸ்துக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி தனி மாநில அந்தஸ்து போராட்ட குழு தலைவர் நேரு…
புதுச்சேரி அரசில் துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், தலைமை செயலர், என மூன்று அதிகார மையங்களாக செயல்படுகிறார்கள் இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறிய அவர்,வெளி மாநிலத்தில் இருந்து வரும் அதிகாரிகள் புதுச்சேரியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இதற்கெல்லாம் தனி மாநில அந்தஸ்து தான் ஒரே தீர்வு என்றார்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு சுமார் ஒரு லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு மத்திய அரசுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
போராட்டத்திற்காக நாளை 25-ம் தேதி ரயில் மூலம் சுமார் 200- க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் டெல்லி புறப்பட உள்ளதாகவும், தங்களின் போராட்டத்திற்கு புதுச்சேரியை சார்ந்த அரசியல் கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும், தமிழக எம்.பி.,-க்களின் ஆதரவு கேட்டு கடிதங்கள் அனுப்பி உள்ளதாகவும் நேரு தெரிவித்தார்.
