

பியூன், தோட்டக்காரர், ஓட்டுனர் என 15 அரசு காலிப்பணியிடங்களுக்கு 11,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பது வேலையில்லா திண்டாட்டத்தின் உச்சகட்ட சூழலை உணர்த்தியிருக்கிறது. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலனவர்கள் பட்டாதாரிகள் என தெரியவந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் இருந்து வருகிறது. ஆனால் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்த நிலை மேலும் மோசமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டதால், பாதுகாப்பு தரக்கூடிய அரசுப் பணிகளின் மீதான மோகம் இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் மாவட்ட நீதிமன்றத்தில் பியூன், தோட்டக்காரர், ஓட்டுனர் மற்றும் ஸ்வீப்பர் என 15 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த 15 பணியிடங்களுக்கு சுமார் 11,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வுக்கான ஆயிரக்கணக்கானவர்கள் அமர வைக்கப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியது.
ஓட்டுனர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10ம் வகுப்பு, இதர வேலைகளுக்கு 8ம் வகுப்பு என்ற போதிலும், இவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டப்படிப்பு,, பட்டமேற்படிப்பு முடித்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் படிக்கும் போது நல்ல வேலை, நல்ல சம்பளம் என கணவுகளுடன் படிப்பை முடித்திருப்பவர்கள். ஆனால் தகுந்த வேலை கிடைக்காமல் அவதியுற்று கடைசியாக காத்திருக்க முடியாமல் கிடைப்பது சிறிய அரசுப் பணி என்றாலும் பரவாயில்லை என மனதை தேற்றிக்கொண்டு அங்கு நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.
வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதியை விட கூடுதலான கல்வித் தகுதி பெற்றிருந்த நீண்ட வரிசைகளில் காத்திருந்த விண்ணப்பதாரர்கள், சிலர் பேசுகையில், எந்த அலுவலகங்களிலும் நிரந்தர வேலை இல்லை. ஆனால் அரசு வேலை என்றால் அது நிரந்தரமானது, நம்பிக்கையானது, பாதுகாப்பானது என்பதால் கல்வித்தகுதியை கருதாமல் அரசுப் பணி என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு விண்ணப்பித்ததாக கூறினர்.
2018ம் ஆண்டில் மத்திய பிரதேச மாநிலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 7.47 லட்சமாக இருந்தது. இதுவே 2019ல் 8.46 லட்சமாக அதிகரித்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 இறுதியில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரின் எண்ணிக்கை 24 லட்சமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2020ம் ஆண்டு 3,605 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
