• Sun. May 5th, 2024

மதுரையில் அமலாக்கத்துறையின் 15 மணி நேர சோதனை நிறைவு..!

Byவிஷா

Dec 2, 2023

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர், மதுரை அமலாக்கத்துறையில் 15 மணி நேரமாக நடத்திய சேதனை நிறைவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரியின் வீடு மற்றும் மதுரை தபால்தந்திநகர் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை உதவி மண்டல அலுவலகத்தில், அங்கித் திவாரியின் அறையில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
இரவு முழுவதும் சோதனை நடைபெற்ற நிலையில் சுமார் 15 மணி நேரத்திற்குப் பிறகு இன்று காலை சோதனை முடிந்து அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர்.
இந்த சோதனையில் மடிக்கணினி மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக அங்கித் திவாரிக்கு சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளவும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் முதல்முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் நுழைந்து சோதனை நடத்தியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி, வெள்ளிக்கிழமை இரவு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜே.மோகனா முன் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவரை வருகிற 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *