திண்டுக்கல் ஆட்சியரிடம் எஸ்.எப்.ஐ. மாநிலத்தலைவர் மனு மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் தேர்வு பிரச்சனை ஒரு புறமிருக்க இன்னொரு புறம் தமிழகத்தில் புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகளை ஒன்றிய அரசு அறிவித்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதன் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் மாணவர் சேர்க்ககை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.
திங்களன்று மனு நீதி நாளில் இச்சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.டி.கண்ணன். மாவட்டச்செயலாளர் முகேஸ் ஆகியோர் திண்டுக்கல் ஆட்சியரை வினோதனை சந்தித்து மனுக்கொடுத்து வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியதாவது.
கடந்த 2021ம் கல்வி ஆண்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படும் என்று அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கல்லூரிகளின் பணிகள் நிறைவடையாத நிலையில் இன்று வரை மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படாத சூழல் நிலவுகிறது. வடமாநிலங்களில் கட்டடங்களே இல்லாமல், கல்லூரியே இல்லாமலே மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளில் கட்டுமானப்பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளும் அந்தந்த தலைமை மருத்துவமனையோடு இணைந்து தான் உள்ளன. அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் அந்த மாணவர்கள் பயிற்சி எடுக்க தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆகவே ஒன்றிய அரசு புதிதாக அறிவிக்கப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு உடனடியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு 1650 புதிய மருத்துவ இடங்களை உருவாக்க ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கேட்டு பெற வேண்டும். என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பாக திண்டுக்கல் ஆட்சியர் வினோதனை சந்தித்து மனுக்கொடுத்துள்ளோம். இது தொடர்பாக மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நடப்பு கல்வி ஆண்டிலேயே மாணவர் சேர்க்கைக்காக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்என ஏ.டி.கண்ணன் தெரிவித்தார்.