• Sat. Apr 20th, 2024

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை!…

By

Aug 9, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திர மரியாதை இன்று புறப்பட்டது.


ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் எனப்படும் ரெங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் நாச்சியார் திருநட்சத்திரமான ஆடிமாதம் பூர நட்சரத்திரத்தின்போது அவதரித்தவர்.


பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகே கொடுத்ததால் சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று பக்தர்களால் போற்றப்படும் ஆண்டாள் ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமானார்.


இதனையடுத்து சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தின் போது ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலிருந்து – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலுக்கு ஆண்டுதோறும் வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறும். அதன்படி இன்று ஆண்டாளுக்கு சமர்ப்பிப்பதற்கான பட்டுபுடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்கள் யாவும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து தலைமையில், திருக்கோவில் தலைமை பட்டாச்சார்யார் மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊழியர்கள் அடங்கிய குழுவினர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து, பிரகாரங்களில் ஊர்வலமாக எடுத்துவந்து பின்னர் சமூக இடைவெளியுடன் இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் எடுத்துச் சென்றனர். இந்த வஸ்திரங்கள் யாவும் நாளை காலை ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை மறுதினம் ஆடிப்பூரத்தின் போது, ஸ்ரீரங்கம் வஸ்திரமரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *